|
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்
அணிக்காகத் தகுதியுள்ள தோழர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கழகப் பொதுச் செயலாளர் வைகோ
அவர்கள் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
அன்புடையீர்,
வணக்கம்.
கழகத்தின் கட்டுமானப் பணிகளை முனைப்புடன் தீவிரப்படுத்திட சிறைச்சாலையிலேயே -சில
மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டேன். அதில், முதல் கட்ட வேலைதான் மாவட்டந்தோறும்
தொண்டர் அணியை அமைப்பதாகும்.
தொண்டர் அணிக்குத் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள்,
இலட்சிய உறுதியுள்ளவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக, தவறான பழக்கவழக்கங்களுக்கு
ஆளாகதவர்களாக இருந்திடல் வேண்டும். அத்தொண்டர் படையினர், கழகத்தின் நிகழ்ச்சிகளை
ஒழுங்குபடுத்துவதோடு, கட்டுப்பாட்டைக் காப்பதற்குத் துணை செய்வது மட்டுமல்லாமல்,
மாவட்டக் கழகம் இடுகிற ஆணைகளை முழுநேரம் செயல்படுத்துக் கூடிய உணர்வும்,
வாய்ப்பும் உள்ளவர்களாக இருக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தங்கள் மாவட்டத்தில் 100 பேர்களைத் தேர்ந்தெடுக்க
விழைகிறேன். தமிழகம் முழுவதும் மொத்தம் 3000 பேர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி
கொடுக்கத் தீர்மானித்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டுவிதமான சீருடைகள்,
காலணிகள் தலைமைக் கழகத்தின் செலவில் தயாரித்துக் கொடுக்கப்படும். எனவே,
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரே ஊரில் - ஒரே நகரத்தில் பலர் தேர்ந்தெடுக்கப்பட
கூடாது. "வைகோவும் 3000 வீரர்களும்(Vaiko and his 3000)" என்று வருங்கால திராவிட
இயக்க வரலாறு வருணிக்கும் வகையில் பணிசெய்யத் தீர்மானித்துள்ளேன். அதுகுறித்த
ஓரளவு விவரங்களைக் கடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் குறிப்பிட்டது
உங்களுக்கு நினைவிருக்கும்.
இத் தொண்டர் அணித் தேர்வில் நான் கண்ணும் கருத்துமாக
இருக்கிறேன். தலைமைக் கழகம் எடுக்கின்ற அனைத்து முடிவுகளையும் தக்க முறையில்
சிறப்புடன் செயல்படுத்தி வரும் தாங்கள் இந்தப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு நான்
திட்டமிட்டுள்ளதைச் செயல்படுத்தி உதவுமாறு வேண்டுகிறேன்.
தொண்டர் அணி தேர்வுக்கான மாதிரிபடிவத்தை தேவைக்கேற்ப நகல்
எடுத்து மாவட்டத்தில் உள்ள ஒன்றிய - நகர பகுதிச் செயலாளர்கள் மூலம் படிவத்தை
விநியோகம் செய்வது அவசியமாகும்.
ஏற்கெனவே தொண்டர் அணியில் உள்ள ஒழுக்கமாகக் கடமையாற்றும்
வீரர்களும் அவசியம் புதுப்பித்துக் கொள்ள ஏற்பாடு செய்திடவும். மாவட்டங்களில்
இரண்டு நாட்களில் நான்கு மய்யங்களிலும், மாநகர் மாவட்டங்களில் ஒரு நாளில் இரண்டு
மய்யங்களிலும் தொண்டர் அணித் தேர்வுகள் தவறாமல் நடந்திட கேட்டுக் கொள்கிறேன்.
தொண்டர் அணி தேர்வு முடிவதற்கு முன் மாவட்ட அமைப்பாளர்
ஒருவர், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் மூவர், மாவட்ட பயிற்றுவிப்பவர்கள் மூவர் என
ஆக மொத்தம் ஏழு தோழர்களை விரைவில் அறிவிக்க அவா கொண்டுள்ளேன்.
தங்கள் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சிறப்பாக பணியாற்றிய
பயிற்சி அளிக்கும் தகுதி வாய்ந்த நால்வரின் பெயர்களை அவர்கள் பற்றிய
குறிப்புகளுடன் அனுப்பி வைத்தால் அந்த குறிப்பில் உள்ள தகுதியின் அடிப்படையில்
மாவட்ட அமைப்பாளரை தேர்வு செய்ய உள்ளேன்.
மடல் கிடைத்த உடன் பரிந்துரை மடலை தலைமைக் கழகத்துக்கு
தவறாமல் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி.
பொதுச் செயலாளர் வைகோ தமது கடிதத்தில் இவ்வாறு
தெரிவித்திருக்கிறார்
|